கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் -  கவியருவி ம. ரமேஷ்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸீதா 

கவிதைக்கு உருது அளித்திருக்கும் கொடை - கஜல் வடிவமாகும். கி.மு. பத்தாம் நூற்றாண்டில் அரேபியாவில் புகழ் பெற்ற வடிவமான கஸீதாவிலிருந்து பிறகு வார்த்தெடுக்கப்பட்டது தான் கஜல் ஆகும். ‘கஸீதா’ என்றால் ‘ஒரு குறிக்கோளை நோக்குதல்’ என்று பொருள் படும். இச்சொல் ‘கஸத’ என்னும் மூலத்திலிருந்து பிறந்ததாகும். இது ஒரு நீளமான கவிதையைக் குறிக்க அரபிகளால் பயன்படுத்தப்பட்டது. முதன் முதலாக அரபியில் கஸீதா எழுதியவர் பாஸீ சண்டையில் கலந்து கொண்ட, தக்லீப் குழுவைச் சார்ந்த முஹல் ஹில் என்று கூறப்படுகிறது. பின்னர், கஸீதா எழுதும் முறை துருக்கியிலும், ஃபார்சியிலும் ஏற்பட்டது. தொடக்கத்தில் ஒரு கவிஞரின் குலத்தைப் புகழவும், அவருடைய எதிரிகளை இகழவுமான கவிதைகளுக்கு இப்பெயர்இருந்து வந்தது. பின்னர், அன்பளிப்பை மனத்திற் கொண்டு ஒரு கவிஞர் ஒரு செல்வரையோ, அவரின் குலத்தையோ புகழும் நீண்ட பாக்களுக்கு இப்பெயர் ஏற்பட்டது”1 என்பார் எம்.ஆர்.எம்.

கஸீதாவின் தன்மைகள்

கஸீதாவின் கண்ணிகள் சில வேளை நூற்றுக்கும் மேற்பட்டு அமைவதுண்டு. கஸீதாவின் தன்மைகள் குறித்து எம்.ஆர். எம். கூறுகையில், “ஒரு சம்பூரணமான கஸீதாவில் மூன்று தன்மைகள் அமைந்திருக்க வேண்டும். முதலில் கவிஞர் தம் அன்பிற்குரியாளின் இல்லத்திற்குச் செல்வதையும், அது வெறிச்சோடிக் கிடப்பதையும் விவரிக்க வேண்டும். இரண்டாவதாக, தாம் ஒருவரிடம் பரிசு நாடிச் செல்லும் போது வழியிலுள்ள பாலையின் வருணனைகளையும், அங்குத் தாம் அனுபவிக்கும் துன்பங்களையும் விவரிப்பதோடு, காட்டு விலங்குகளோடு தம்முடைய ஒட்டகத்தை ஒப்பிட்டு வருணிக்கவும் வேண்டும். மூன்றாவதாக, தாம் எவரை மனதில் கொண்டுள்ளோமோ அவரைப் புகழ்ந்தோ அல்லது இகழ்ந்தோ பாவியற்ற வேண்டும். இதுவே கஸீதாவின் முக்கிய பகுதியாகும்”2 என்கிறார்.

அமைப்பு 

கஸீதாவின் அமைப்பு குறித்து மேலும், எம். ஆர். எம். கூறுகையில், கஸீதா முழுவதும் ஒரே சந்தத்தில் அமையப் பெற்றிருப்பதாலும் பாலை பற்றிய வருணனை திரும்பத்திரும்ப ஒரே மாதிரியாக ஆனால், வெவ்வேறு சொற்களில் வருவதாலும் படிப்பவர்களை மட்டுமல்லாது இதனை எழுதும் கவிஞர்களையும் அலுப்படையச் செய்கிறது. எனவேதான் துல்ரும்மா என்ற கவிஞர் தம்முடைய பிரசித்தி பெற்ற கஸீதாவின் முதலடியை மட்டும் எழுதி, பின்னர் கருத்து வராததன் காரணமாக அத்துடன் அதனை வைத்தார் என்றும், நெடுங்காலம் சென்ற பின் அவர் இஸஃபஹான் சென்றிருந்த போது திடீரெனப் புதிய கருத்துத் தோன்றவே அக்கஸீதாவை எழுதி முடித்தார் என்றும் கூறப்படுகிறது. 

சில கவிஞர்கள் கஸீதா என்னும் பெயரில் கவிதைகள் எழுதியுள்ளனர். ஆனால் அவற்றில் கஸீதாவின் இலக்கணங்கள் அமையப் பெறவில்லை. மெய்ஞ்ஞானம் பற்றிய கஸீதாக்களும் அரபியில் இருக்கின்றன. ஒரு சூஃபி உறங்கும் போது, ‘மெய்ஞ்ஞானம் பற்றிக் கூறப்பட்டவைகளில் மோசூலிய கஸீதாவை விட மேலானது ஒன்றில்லை’ என்று கனவில் அசரீரியாக முழுங்குவதைச் செவியுற்றார் என்று கூறப்படுகிறது. இதனை எழுதியவர் மோசூலின் காஜியான அல்முர்த்தஜா என்பவராவார். அதில் ஒரு காதலன் தன் காதலியின் மீது கொண்டிருக்கும் மெய்ஞ்ஞானக் காதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது3 என்று கூறுகிறார்.
கஸீதாவின் தொடக்கத்தில் இருக்கும் பகுதிக்கு ‘தஸ்பீப்’ என்று பெயர். இந்த தஸ்பீப் பகுதியில் தான் கஜலுக்கான உணர்வுகள், தன்மைகள், நயங்கள் காணப்படும். நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணிகளாகக் கஸீதா பாடப்பெற்றன.

கஜல் - சொற்பொருள் விளக்கம் 

கஜல் என்ற அரபிச் சொல்லின் நேரடிப் பொருள் ‘மான்கண்’ என்பதாகும். ‘ழுயணநடடந’ என்ற சொல்லுக்கு வட ஆப்பிரிக்காவில் காணப்படும் சிறிய, மென்மைத் தன்மை வாய்ந்த மான் வகை என்பது பொருள். இவ்வகை மான்கள் ஆசியா, ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. இவை, தம்முடைய அழகான உடலசைவுகளுக்காகவும், மென்மை வழியும் கண்களுக்காகவும் சிறப்போடு குறிப்பிடப்படுகின்றன4 என்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி கூறுகிறது. கஜல் என்ற சொல்லுக்கு “வனப்பும், மென்னோக்குமுடைய சிறுமான் வகை; அரபிய நாட்டு மான்”5 என்று சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி எடுத்துக்காட்டுகிறது.

அகராதிப் பொருள்

அமெரிக்கானா பேரகராதியிலிருந்து, “கஜல் என்பது இஸ்லாமிய இலக்கிய வடிவம், பாடப்படும் கவிதைகளில் ஒரு வகையானவை, பொதுவாக அழகுணர்வோடும், சுருக்கமாகவும், சிறப்பாகக் காதல் குறித்துப் பாடப்படும் வடிவமாகும்”6 என்று அறிய முடிகிறது. பிரிட்டானிகா பேரகராதி, கஜல் என்பது காதலின் பரிமாணங்களைச் சுருக்கமாக வெளிப்படுத்தும் பாடல் வடிவமாகும் என்கிறது.

வழக்குப் பொருள்

எம்.ஆர்.எம். விளக்கியுரைக்கின்ற போது, “அரபிச் சொல்லான இதன் பொருள் பெண்களுடன் பேசுதல், காதல் மொழி பேசுதல் என்பதாகும். பிரிவாற்றாமை பற்றியும் காதலினால் எற்படும் விரக வேதனையைப் பற்றியும் எடுத்துரைக்கும் ஒரு வகைப் பாவினத்திற்கு இப்பெயர் கூறப்படுகின்றது”7 என்பார்.இரா. முருகன் கூறுகையில், “பெண்ணிடம் பேசுவது என்ற பொருள் கொண்ட அந்தச் சொல் பெண்ணைப் பற்றி, காதல் பற்றி, பிரிவுத்துயர் பற்றி, அதை மறக்க மதுவில் மூழ்கும் சராசரி மனிதனை, சக்கரவர்த்தியைப் பற்றிய படைப்பாக நீட்சியடைகிறது”8 என்கிறார்.

கஜல் இலக்கணம்

“உருது இலக்கியத்தில் கீத், நக்ம், ருபையாத், ஆஸாதி ஷாய்ரி, இப்படிப்பல வடிவங்கள் உள்ளன. இவற்றின் அமைப்புகள் பின்வருமாறுகீத் - பாடல்நக்ம் - விருத்தம் (நக்மா-விருத்தம் போன்ற அழகி)ருபை - நான்கு அடிகள் (ருபை ஒருமை, ருபையாத் பன்மை)அஸாதி ஷாய்ரி - புதுக்கவிதை, நவீன கவிதைமேலும், சூஃபியிசத்திலிருந்து உருவான கவ்வாலி என்னும் குழுப்பாட்டு கஸீதா எனும் புகழ்மாலை எனப்பல யாப்பு வகைகள் உருதுவில் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தன்மையையும் சூழலையும் கொண்டவை. அஸாதிஷாய்ரி நீங்கலாக மற்ற அனைத்துக்கும் இலக்கணம் உண்டு”என்கிறார் அபுல் கலாம் ஆசாத்.

கவிக்கோ கூறுகையில், “கஜல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லைஎன்கிறார்.கஜலின் உள்ளடக்கக் குறிப்புகள் - அதாவது பாடுபொருளின் கருகவிக்கோ கஜலின் உள்ளடக்கக் குறிப்புகள் பற்றி கூறுகையில், சில வல்லெழுத்து ஒலிகளையும், மெய் இரட்டிப்பதையும் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் காதலின் துயரத்தால் ஏங்கித் துடிக்கும் காதலன், காதலியை விளித்துக் கூறுகின்ற முறையிலேயே அமையும். காதலியின் சௌந்தர்யம், தவிக்க வைக்கும் பண்பு, காயம்பட்ட இதயத்தின் வேதனை என்ற தொனியில் கருத்துக்கள் அமையும். காதலியை விளிப்பது என்ற தொடர்பு தவிறக் கண்ணிகளிடையே கருத்துத் தொடர்பு இருக்கக் கூடாது. 

அப்படி இருந்தால் அது கஜல் ஆகாது. (காதல் உலகில் ஒன்றிற்கொன்று தொடர்பற்ற உணர்ச்சி வசப்பட்ட உலவாக் கட்டுரைகளே பேசப்படும் என்ற ஆழ்ந்த உண்மையைக் குறிப்பால் உணர்த்தும் நுணுக்கமான வரையறை இது) பதினேழு மரபான சந்த விகற்பங்களும், இருபத்தாறு, அதற்கும் மேற்பட்ட புதிய சந்த விகற்பங்களும் கஜலுக்கு உண்டு. விட்டில்-விளக்கு, பூ-புல்; சபை (மஹயில்); இலட்சிய அடைவிடம் (மன்சில்), கடல்-நீர்த்துளி; மதுக்கடை-மது பரிமாறுகிறவன்; வசந்தம்-இலையுதிர் காலம்; முள்; கூடு; நீர்ச்சுழல், புயல், கரை, தோணி போன்ற ஏராளமான படிமங்களும் குறியீடுகளும் இதில் கையாளப்படும்”என்று தெளிவாக விரித்துரைக்கிறார்.

இன்றைய கஜல்கள்

“பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த கஜல் வடிவமானது காதலையும், இறைமையையும் மட்டும் பாடாமல், வாழ்வின் எதார்த்தங்களையும் தெளிவாகப் படம் பிடித்திட வேண்டும் என்று ஹலி என்பவர் குரல் கொடுத்தார். இவரைத் தொடர்ந்து அக்பர் அல்லாபதி, இக்பால் போன்றோர் இக்கொள்கையை வலியுறுத்தினர். அதோடு மட்டுமல்லாது சமூக, அரசியல், மனிதம் போன்ற வாழ்வின் எல்லாத் துறைகளைப் பற்றியும் பாடப்படுதலாக கஜல் இருந்திட வேண்டும் என்றனர்” என்று சாதிக் முகம்மது கூறுகிறார்.

கஜல் கவிதையில் ஆழம் கண்ட கவிஞர்களான மஜாஸ், ஜாஸ்பி, அக்தர் அன்சாரி, ஃபாயிஜ், மஜ்ரூத் சுல்தான்புரி, பல்வேஸ் ஷாஹிதி, குலாம் ரப்பானி தாபன், ஜான் நிஸார் அக்தர் போன்றோரெல்லாம் காதலை மட்டுமே மையமாக வைத்துப் படைக்காமல், சமூக அரசியல் புத்துணர்வுக் கொள்கைகளைக் கொண்டு, மனித மனத்தோடு எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக உறவாடக் கூடிய வகையில் கஜல்களைப் படைத்து வெற்றிவாகைச் சூடினர்.இன்றைய இளம் கவிஞர் பட்டாளமானது, கஜலின் பரிமாணங்களைச் செழுமைப்படுத்திடும் சீரிய பணியில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளது. “ஹசன்நயிம், பானி, ஷா தம்கானாத், கிருஷ்ணா மோகன், ஷாரியார், பஷீர் பத்ர், மக்மூர் சய்தி போன்றோர் இன்றைய குறிப்பிடத்தக்க கஜல் கவிஞர்கள் ஆவர். ஹசன் நயிம் டெல்லியில் ‘கஜல் அகாதெமி’ என்ற ஒன்றை நிறுவி நவீன கஜல் வடிவத்தை இளைய தலைமுறைக் கவிஞர்கள், வாசகர்களிடையே பரப்பி வருகிறார்”29 என்று இந்திய ஒப்பிலக்கிய நூல் சுட்டிக் காட்டுகிறது.

தமிழில் கஜல் கவிதையின் வடிவ முயற்சி மிக அரிதாகவே நிகழ்ந்துள்ளது. உருது, பாரசீக மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களே கஜல் கவிதையின் வடிவத்தை உள்வாங்கி அதைப் பிற மொழிகளில் அறிமுகம் செய்ய இயலும். தமிழகத்தைப் பொறுத்தவரை உருது பாரசீக மொழிகளில் தேர்ச்சியும், புலமையும் மிக்கவர்களாக இசுலாமியர்களே திகழ்வதால், தமிழில் கஜல் கவிதையின் அறிமுக முயற்சி இவர்களின் புலமையைச் சார்ந்தே அமைகிறது.அப்துல் ரகுமான் உருது மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு, மதுரையில் பிறந்து, தியாகராயர் கல்லூரியில் தமிழ் இலக்கிய இலக்கணத்தை முறைப்படி கற்றுத் தேர்ந்தவராதலின், தமிழில் கஜல் வடிவக் கவிதையை அறிமுகம் செய்யும் முயற்சி அவருக்கு சாத்தியமாகியுள்ளது.

கஸல் - எளிய விளக்கம் நன்றி - கவியருவி ம. ரமேஷ்

‘கஸல்’ அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம். ‘கஸல்’ என்றாலே ‘காதலி’யுடன் பேசுதல் என்று பெயர். கஸல் பெரும்பாலும் காதலையே பாடும்; அதுவும் காதலின் சோகத்தை. சிறுபான்மை ஆன்மிகத்தையும் பாடும். கஸல் இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத்தொடர்பு இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. கண்ணிகளை இணைக்க வேண்டி இயைபுத் தொடை, யாப்புச் சந்தம் மேற்கண்ட மொழிகளில் பின்பற்றப்படும். இம்முறை தமிழ்க் கஸல்களில் பின்பற்றப்படுவதில்லை. பின்பற்றவும் வேண்டியதில்லை. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ போன்ற மேற்கத்திய வடிவங்களைத் தமிழ்மொழிக்கேற்ப மாற்றங்களைச் செய்துகொண்டது இக்கஸலுக்கும் பொருந்தும். பேச்சுச் சந்தத்திற்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் அம்முறை தமிழில் தவிர்க்கப்படுகிறது. எனவே தமிழ்க் கஸல் புதுக்கவிதை வடிவில் காணப்படுவதால் புதுக்கவிதை ஆகிவிடாது. தமிழில் முதலிரண்டு (மின்மினிகளால் ஒரு கடிதம், ரகசியப் பூ ) கஸல் கவிதைத் தொகுதிகளைக் கவிக்கோ அப்துல் ரகுமான் படைத்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்